Total Pageviews

Wednesday 4 November 2015

சென்றுவிட்ட  விடுமுறையின்
மாலைப் பொழுதில்
மனைவி மக்கள்  கரம்பிடித்து
செலவில்லாச் சிற்றுலாவாய்
காலார நடைபயின்றேன்
வழியினில்  "காந்தி   மீயூசியம்"

என்னவோ என் மனதில்
குளிர் நெருப்பு கொப்பளிக்க
குடும்பத்துடன் உட்புகுந்தேன்

அப்பாடா .......
விளம்பர இடை வேளையில்
உணவிடல் போல
குடும்ப இறுக்கத்தைச்
சற்றே மறந்து
குழந்தைகளுடனே
உலவிடும்  மனைவி

ஊர்வலம் முடித்து
மணமகன் மண்டபம்
புகுந்திட்ட பின்னர்
தனித்து  விடப்பட்ட
மாப்பிள்ளை  அழைப்பு
வாகனம் போல
நான் மட்டும்  தனியாய் ....

நினைவு அலைகள்
பின் நோக்கி நகர
கால் போன போக்கில்
மெல்ல நடந்தேன்

பால்ய சிநேகமாய்
தென் மேற்கு மூலை
மரத்தடி வரவும்
மெல்லவே  கால்கள்
மடித்து தானாய் அமர்ந்தது

எத்தனை காலம்
நானும் அவளும்
மதிய உணவை
இம் மரத்தடி நிழலில்
ஒன்றாய் அமர்ந்து
பரிமாறிக் கொண்டோம்

தயிர்சாதமும்
வடு  மாங்காயும்
இப்பொழுதெல்லாம்
யார் கொடுத்தாலும்
ருசித்திடவில்லை

விழிகளில் அரும்பிய
திவலையை அகற்றி
மெல்லவே  மரத்தினைத்
தழுவியபோது

'அவளின்  வாசம் இன்னமும் அங்கே '
வியப்பில்  ஒருகனம்      
 சுற்றிலும் நோக்கிட

என்னைப்  போலவே
நேற்று முன் தினம்
அவளும் இங்கே
குடும்பமாய்  வந்து
பழைமையை அசைபோட்ட
மௌனச் செய்தியை

தன்கிளைகளின் அசைவினில்
சைகையாய்  சொன்னது .    
 
                                         ச.பால சுப்பிரமணிய பாரதி

        

3 comments:

  1. ரொம்பத்தான் கொழுப்பையா.....சகோதரி இருக்கும்போதே காதல் நினைவா?

    ஹா ஹா வருக பாரதி..வருக...
    நமக்கு இஙே நிறைய வேலையிருக்கிறது...

    ReplyDelete

  2. வணக்கம்!

    காதல் நினைவுகளைக் காட்டும் கவியடிகள்
    ஊதல் இனிமை உடைத்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete