Total Pageviews

Sunday, 29 November 2015

சினமுடன்  நோக்குகிறாள்
''WEEK   END"
 மழையை  என்மகள் .

Sunday, 8 November 2015

                                JCB
                               --------
தொழிலாளியின் பிழைப்பில் 
மண்ணைப் போட
முதலாளித்துவம் எடுத்திட்ட
புதிய வடிவம் .
                       ச.பாலசுப்பிரமணிய பாரதி  
                                      புதுமைச்  சாகுபடி
ஆழமாய் மண்கிளறி
கலவை விதை விதைக்க
கழனியேங்கும்
காங்க்ரீட் விருட்ஷம்
                                   
                                  ச. பாலசுப்பிரமணிய பாரதி
       
  

Saturday, 7 November 2015

ஆபத்து ஏதும்  வருமோஎன
ஐந்தாம்படையாய்
வேவுபார்க்குது
தாழ்வாரக் கூட்டில்
முட்டைஇட்டுள்ள
சிட்டுக்குருவி
                        ச.பாலசுப்பிரமணிய  பாரதி
   
தவமாய்  தவமிருந்தும்
வராத  மழை
நடைபாதை  வியாபாரியின்
பிழைப்பில்  அடிக்க
தீபாவளி  வாரத்தில்
தறிகெட்டுப்  பெய்கிறது

                                ச.பாலசுப்பிரமணிய  பாரதி





     

Friday, 6 November 2015

வாய் வலித்துப்  போனதாலே
கடை வாயில் வழியவிட்டு 
அயற்சியிலே உறங்குகின்ற 
குழந்தைக்கு  

முலைப்பால் கொடுக்கின்ற 
முனைப்பினிலே 
ரவிவர்மா ஓவியம் போல் 
கண் அயர்ந்து துயில்கின்ற 
என் இனிய இல்லாளே !

உன் விலகிய மேலாடையை 
நான் 
சரி செய்யும் அந்நேரம்
  
இழுத்து  இழுத்து 
 மறைக்கின்ற
உன் பால்ய செய்கைகள்
பசுமையாய் என் நினைவில் ..........

                                       ச.பால சுப்பிரமணிய பாரதி .
  
 

Thursday, 5 November 2015

ஏ பெண்ணே
இடுப்புக்கு மேலே
வெற்றுடம்பாய்
இருவருமே
சுற்றித் திரிந்திட்டோம்
இன்றென்ன வந்தது
புதிதாய் ஓர் துண்டை
மேல் போர்த்தி வந்து நீ
இழுத்து இழுத்து
மறைக்கின்றாய்
புதிதாய் எனக்கொன்றும்
புலப்படவில்லை
ஆனாலும்
மீண்டும்மீண்டும்
உன்னை நோக்க
ஏதோ ஒன்று
ஈர்க்கிறது
                  ச.பால சுப்பிரமணிய  பாரதி         

Wednesday, 4 November 2015

சென்றுவிட்ட  விடுமுறையின்
மாலைப் பொழுதில்
மனைவி மக்கள்  கரம்பிடித்து
செலவில்லாச் சிற்றுலாவாய்
காலார நடைபயின்றேன்
வழியினில்  "காந்தி   மீயூசியம்"

என்னவோ என் மனதில்
குளிர் நெருப்பு கொப்பளிக்க
குடும்பத்துடன் உட்புகுந்தேன்

அப்பாடா .......
விளம்பர இடை வேளையில்
உணவிடல் போல
குடும்ப இறுக்கத்தைச்
சற்றே மறந்து
குழந்தைகளுடனே
உலவிடும்  மனைவி

ஊர்வலம் முடித்து
மணமகன் மண்டபம்
புகுந்திட்ட பின்னர்
தனித்து  விடப்பட்ட
மாப்பிள்ளை  அழைப்பு
வாகனம் போல
நான் மட்டும்  தனியாய் ....

நினைவு அலைகள்
பின் நோக்கி நகர
கால் போன போக்கில்
மெல்ல நடந்தேன்

பால்ய சிநேகமாய்
தென் மேற்கு மூலை
மரத்தடி வரவும்
மெல்லவே  கால்கள்
மடித்து தானாய் அமர்ந்தது

எத்தனை காலம்
நானும் அவளும்
மதிய உணவை
இம் மரத்தடி நிழலில்
ஒன்றாய் அமர்ந்து
பரிமாறிக் கொண்டோம்

தயிர்சாதமும்
வடு  மாங்காயும்
இப்பொழுதெல்லாம்
யார் கொடுத்தாலும்
ருசித்திடவில்லை

விழிகளில் அரும்பிய
திவலையை அகற்றி
மெல்லவே  மரத்தினைத்
தழுவியபோது

'அவளின்  வாசம் இன்னமும் அங்கே '
வியப்பில்  ஒருகனம்      
 சுற்றிலும் நோக்கிட

என்னைப்  போலவே
நேற்று முன் தினம்
அவளும் இங்கே
குடும்பமாய்  வந்து
பழைமையை அசைபோட்ட
மௌனச் செய்தியை

தன்கிளைகளின் அசைவினில்
சைகையாய்  சொன்னது .    
 
                                         ச.பால சுப்பிரமணிய பாரதி

        

Tuesday, 3 November 2015

மனைவியைக் கொலை செய்த
கணவனுக்கு
ஆயுள்தண்டனை
அவர்களின்
ஆறு வயதுக் குழந்தைக்கு ?

                                        ச.பாலசுப்பிரமணிய  பாரதி .